டில்லி

சீனர்களுக்கு விதிகளை மீறி விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை சிபிஐ  நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும் அதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ தில்லி பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இதையொட்டி கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவருடைய தணிக்கையாளர் பாஸ்கர் ராமனைக் கைது செய்தது.

தானும் கைது செய்யப்படலாம் என்பதால், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாக்பால் முன்னிலையில் அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது.

எனவே கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, அவரை கைது செய்வதாக இருந்தால் 3 நாட்கள் முன்பாகவே அவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.  தவிர கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து வந்ததும் 16 மணி நேரத்தில் விசாரணையில் இணைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.