திருப்பதி

திருப்பதி கோவிலில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான சிறப்புத் தரிசன சீட்டுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படுகிறது.

இணையம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ. 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.  கடந்த மார்ச் மாத இறுதியில்  ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ. 300 டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.

ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.  ஆகவே தற்போது திருப்பதிக்கு நேரில் வரும் பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்று சுவாமியைத் தரிசித்து வருகின்றனர். கோடை விடுமுறையால் தற்போது திருமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.

சுவாமி தரிசனம் செய்ய தற்போது 10 மணிநேரம் ஆகிறது.  இன்று ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ. 300 சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் காலை 9 மணிக்குத் தேவஸ்தானம் இணையத்தில் வெளியிடுகிறது. தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 62 நாட்களுக்கு (2 மாதங்கள்) இன்று டிக்கெட்டுகள் வெளியாக உள்ளன.