டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், தனது பதவிக்காலம் முடிவடையும் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

63 வயதான சந்திரசேகரன், டாடா குழுமத்தின் இயக்குநர் குழுவிடம் தனது முடிவைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையும், சர் ரத்தன் டாடா அறக்கட்டளையும் ஒருமனதாக பரிந்துரைத்திருந்தன. ஆனால், 2026 பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒரு உறுப்பினர் ஆதரவு தெரிவிக்காததால், தீர்மானம் நிறைவேறவில்லை.

இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக அவரது பதவி நீட்டிப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், நிறுவனத்தின் எதிர்கால தலைமை குறித்து தெளிவில்லாத நிலை நீடிப்பது சரியல்ல என்று சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அடுத்த தலைவரை தேர்வு செய்து, சுமுகமான பொறுப்பு மாற்றத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு அவர் நிர்வாகக் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்திரசேகரன் 2017-ல் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் டாடா குழுமம் விமானப் போக்குவரத்து, செமிகண்டக்டர், மின்னணு உற்பத்தி, பேட்டரி, மின்சார வாகனங்கள் மற்றும் டிஜிட்டல் துறைகளில் வேகமாக விரிவடைந்தது. ஏர் இந்தியாவையும் டாடா குழுமம் மீண்டும் கையகப்படுத்தியது.

அவரது தலைமையில் டாடா குழுமத்தின் மொத்த வருவாய் 2020-ம் நிதியாண்டில் ₹7.89 லட்சம் கோடியில் இருந்து, 2026-ம் நிதியாண்டில் ₹16.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வரிக்குப் பிந்தைய லாபமும் ₹32,000 கோடியில் இருந்து ₹1.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு தொடர்பாக டாடா அறக்கட்டளைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, புதிய தொழில்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து சில அறக்கட்டளை உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66% பங்குகளை வைத்துள்ள டாடா அறக்கட்டளைகளின் முடிவு, சந்திரசேகரனின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருந்தது. ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற இருந்த கூட்டத்தில் அவரது பதவி நீட்டிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே அவர் பதவி நீட்டிப்பை ஏற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

சந்திரசேகரன் டாடா சன்ஸ் மட்டுமின்றி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ், டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் உள்ளிட்ட பல டாடா நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார். அவரது விலகல் டாடா குழுமத்தில் அடுத்த கட்ட தலைமை மாற்றத்துக்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.