டெல்லி: தமிழ்நாட்டுக்கு தினசரி 5,000 கன அடி தண்ணீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடுக்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டு பிடித்து வருகிறது.  தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் சர்ச்சை செய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு மத்தியஅரசை வலியுறுத்தியதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் நாடியது.

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், தண்ணீரை திறந்து விட மறுத்து வரும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மேகதாது அணை கட்டுவோம் என்று கூறி வருவதுடன், தமிழ்நாடு அரசையும், விவசாயிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு முறையான பதில் தெரிவிக்க திமுக அரசு மறுத்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில்,  காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86 வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மைக் கூட்டத்தில், வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறந்து விடவில்லை என ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதுடன், ஆணையம்  உத்தரவிட்ட நான்கு நாட்களுக்கு மட்டுமே 5000 கன அடி நீர் திறந்து விட்டது. அதன் பிறகு தண்ணீர் திறந்து விடுவதைக் கர்நாடகா அரசு குறைத்துவிட்டது. அதன்பிறகு வினாடிக்கு 4,000லிருந்து 3,000 கன அடி நீர் தான் திறந்து விடப்பட்டது என தெரிவித்தது.

மேலும், தண்ணீர் இல்லாமல்,  காவிரி பாசனப் பகுதியில் குறுவை நெற்பயிர்கள்  காய்ந்து போகும் நிலை உருவாகி இருப்பதாகவும்,  ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்  உடனடியாக தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  கர்நாடக அரசு அதிகாரிகள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்களால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முடியாது எனப் பல்வேறு கணக்குகளைக் காட்டினர்.

இரண்டு தரப்பினர் கருத்துக்களையும் கேட்ட ஒழுங்காற்றுக் குழு தலைவர்,  கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்த பின் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.