டில்லி,

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பல நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வாரி வழங்கி வருகிறது.

இந்நிலையில், கட்சிகளுக்கு ரூ.2 ஆயிரம்  மட்டுமே ரொக்கமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

இதன் காரணமாக அரசியல் கட்சிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளன.

தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் கணக்கில் வராத பணத்தை அள்ளி வீசி வாக்குகளை பெற்று வருகிறது. இதை தடை விதிக்கும் வகையிலும், சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெறுவதை  தடுக்கும் வகையிலும்  வருமான வரித்துறையினர்  இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே சமீபத்தில்,  ‘தேர்தல் நிதிப் பத்திரங்கள்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி,  அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனமானாலும், தனி நபர் என்றாலும், பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள இந்த நன்கொடை பத்திரத்தை வாங்கி, அதை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பத்திரங்கள் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்றும்,  ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 10 நாள் என்ற வகையில், வருடத்திற்கு 40 நாட்கள் மட்டுமே   இந்தப் பத்திரங்கள் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது அடுத்த அதிரடியாக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.