டில்லி:

எதிரி நாடுகளின் போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணை போன்றவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழிக்க ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்க இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரையம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) பரிசீலித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஏவுகணைகளை வாங்குவதற்கு டிஏசி கடந்த 2015 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷிய அதிபர் புடினுக்கும் இடையே கோவாவில் 2016ம் ஆண்டு அக்டோபரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எஸ்-400 டிரையம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகள், 4 கிரிகோரிவிச் ரக போர்க் கப்பல்கள், 200 காமோவ் -226டி இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரஷியாவுடன் மத்திய அரசு உடன்பாடு ஏற்படுத்தியது.

ஐஎன்எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கிக் கப்பலைத் தொடர்ந்து, அணுசக்தியில் இயங்கும் 2வது நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவும் இரு நாடுகளிடையே உடன்பாடு ஏற்பட்டது. இவை அனைத்தும் ரூ.67 ஆயிரம் கோடி மதிப்பிலானவையாகும்.

இந்நிலையில், 5 இடைமறி ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு இறுதி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

நம் நாட்டுக்கு தரையில் இருந்து புறப்பட்டு வானில் சென்று எதிரிகளின் ஏவுகணைகள், ரகசிய விமானங்கள், உளவு விமானங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கக் கூடிய 5 ஏவுகணை அமைப்புகள், நவீன ராடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றை ரஷியா அடுத்த 2 ஆண்டுகளில் வழங்கும்.