சென்னை: தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது இதுதான் திமுக சாதனை என்றும், ஊழல் செய்வதிலும், லஞ்சம் பெறுவதிலும் கூட திமுக அரசு முதன்மை தான் என்று கூறியதுடன், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

மாநிலங்களவை இடத்துக்கான தேர்தலில், அதிமுக வேட்பாளர்களான  முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், தர்மர் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி,  திமுகவின் ஓராண்டில்,  ஊழல் செய்வதில் முதன்மை, லஞ்சம் பெறுவதில் திமுக அரசு முதன்மையாக விளங்குகிறது குறிப்பாக, எது கிடைக்கிறதோ? இல்லையோ? மாநிலம் முழுவதும்,  கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா அமோகமாக கிடைக்கிறது. கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில்தான் திமுக அரசு சாதனை படைத்துள்ளது.

கஞ்சாவால், தமிழக மாணவர்கள் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 2200 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டுள்ள தாகவும், அதில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மையில் முதல்வர் தாக்கல் செய்த காவல்துறை மானியக் கோரிக்கை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள் கஞ்சாவை கட்டுப்படுத்தவதற்காக ஆபரேசன் கஞ்சா 2.O மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  குறிப்பாக, இன்றைய தினம் மருத்துவத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால்தான் கஞ்சா விற்பனை தடை செய்யப்படும். ஆனால், தமிழ்நாட்டில் காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை. இதனால் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் அதிமுக வினர் பேசினோம். ஆனால் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதுபோல ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.  ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தோடு  இணைந்து கொண்டு, தடை செய்ய அரசிற்கு மனம் இல்லை. மனமிருந்தால் சட்டத் திருத்தம் கொண்டு வந்து தடை செய்திருக்கலாம். இதை தடை செய்ய கோரினால், டிஜிபி, ஆன்லைன் ரம்மி விளாயாடாதீர்கள் என்கிறார் என்றவர், தலைநகர் சென்னை மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதும், திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு உள்ளது என்றார்.

திமுக அரசு  கடந்த ஓராண்டில் ஒன்றும் செய்யவில்லை. ஊழல் செய்வதிலும், லஞ்சம் பெறுவதிலும் கூட திமுக அரசு முதன்மை என்றவர்,  மக்கள்  திமுக அரசின் மீது நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இந்த ஆட்சி எப்போது முடியும் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.