சென்னை:  தேசிய கல்விக் கொள்கையை படிக்காமல் சிலர் எதிர்த்து வருகின்றனர், உயர்கல்வித்துறை அமைச்சர் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பட்ட மளிப்பு விழாவில்  கலந்துகொண்ட ஆளுநர் ரவி அமைச்சர் முன்னிலையில்  பேசினார்.

சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி வீழிநாதன், பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட  359 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் உட்பட 19,363 பேருக்கு பதக்கம், பட்டம், சான்றுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி னார். பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் தனது நல் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்றும் கூறினார்.

தொடர்ந்து  பேசியவர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தி, சிறப்பான பல்கலைக் கழகமாக செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவர் இருக்கை, தந்தை பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை என்று சிறந்த முயற்சிகளை திறந்தநிலை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.  தினமும் பல மாற்றங்கள் நிகழும் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  பல புதிய பரிணாமங்களில் தொழில்நுட்பம் வளர்ந்துவருகின்றன. திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்ததற்கு சென்னை ஐ.ஐ.டி.,க்கு நன்றி.

நம் கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 70% அளவு பெண்களே உயர்கல்வி படிப்பவர்களாக இருப்பதாக வும், பெண்கள் அதிகளவில் உயர்கல்வி பயில, சமுதாய முன்னெடுப்புகள், மாற்றங்களே காரணம் என்று குறிப்பிட்டவர்,  பெண்கல்வியே நாட்டின் சொத்து என்றும் அவர்களே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதாகவும் பேசினார்.

புதிய கல்விக் கொள்கையை படித்து அதில் உள்ள நல்ல அம்சங்களை பல்கலைக்கழகங்கள் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு UGC-இன் அங்கீகாரத்தை பெற்றுத்தரச் சொல்லும் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தேசிய கல்விக்கொள்கையை முதலில் படிக்க வேண்டும் என்றும், அதை முழுவதும் படிக்காமலும், புரிந்துகொள்ளாமலும் சிலர் எதிர்த்து வருவதாகவும் பேசினார்.

கல்வியை வேறுவடிவில் அணுக தயாராக வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் பேசிய ஆளுநர், பல மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் என்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா என்றும், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவில் அனைவருக்கும் இயற்கையான சத்தான உணவுகள், சுகாதாரம், தரமான கல்வி, தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பேசினார்.

படித்து முடிக்கும் அனைவருக்கும் அரசால் வேலை தர முடியாது என்பதால் இளைஞர்கள் தொழில்முனைவோராக முயற்சிக்க வேண்டும் என்றும், வேலை தருவோராக வர வேண்டும் என்றும் வேலை தேடுவோராக வரக்கூடாது.

இவ்வாறு ஆளுநர் கூறினார்.