சென்னை: தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை மாலை வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிட 2600க்கும் மேற்பட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். இதையடுத்து நாளை மாலை பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 412 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் சேர்த்து 483 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 71 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் நாளை வெளியிடப்படும்.