மீரட்: உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நகர்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த புகார்களையடுத்து, சமாஜ்வாடி – பகுஜன்சமாஜ் – ராஷ்ட்ரிய லோக்தள் அடங்கிய கூட்டணியின் தொண்டர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளை, இரவுப் பகலாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

மொத்தமாக 24 மணிநேரத்தை, மூன்று 8 மணிநேரங்களாகப் பிரித்துக்கொண்டு காவல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ‘இவிஎம் செளகிதார்கள்’ என்று கிண்டலாக அழைக்கப்படுகிறார்கள்.

மேற்கு உத்திரப்பிரதேசத்தில் மீரட் நகரில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஒரு அறையை, மகா கூட்டணியின் தொண்டர்கள், கூடாரம் அமைத்துக்கொண்டு, 8 மணிநேர ஷிப்ட் பிரித்துக்கொண்டு, பைனாகுலர் சகிதம் காவல் காக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்திய தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மை இந்தளவிற்கு கேள்விக்குள்ளானது இந்த தேர்தலில்தான் என்பதை தாரளாமாக கூறலாம். ஆனாலும், தேர்தல் கமிஷன் அ‍துகுறித்து சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இந்தநிலை உத்திரப்பிரதேசத்தில் மட்டுல்ல. பல்வேறு மாநிலங்களிலும், எதிர்க்கட்சிகள் தங்களின் முகவர்களை தொடர்ந்து எச்சரிக்கும் வகையிலேயே நிலைமை அவல நிலையில் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.