புதுடெல்லி: வாக்கு இயந்திரங்களை மாற்றிவைத்தல் அல்லது இடமாற்றுதல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் தொடர்ந்த புகார்களையடுத்து, அவற்றை கையாள தனியாக ஒரு இவிஎம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கண்ட்ரோல் அறை மே 22ம் தேதி காலை 11 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இயங்கும்.

உத்திரப்பிரதேசத்தின் காஸிபூர் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் அஃப்ஸல் அன்சாரி, இவிஎம் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பாக, தனது 5 ஆதரவாளர்களை 8 மணிநேர ஷிஃப்ட் முறையில், சம்பந்தப்பட்ட அறையை காவல்காக்க அனுமதிக்க வேண்டுமாய், தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

இறுதியில், உள்ளூர் நிர்வாகத்தால் அவரின் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னரே பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதுபோன்று பல இடங்களில் புகார்கள் வருவதாலேயே இத்தகைய ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.