பெங்களூரு

ண்ணீர் பற்றாக்குறையை முன்னிட்டு பெங்களூரு நகரில் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட 5 வருடங்களுக்கு தடை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு நகரில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பெரும்பாலான குடியிருப்புக்களில் நீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளன. அதனால் இந்த குடியிருப்புக்கள் முழுக்க டாங்கர் தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளன.

பெங்களூரு நகரில் விரைவில் காவேரி நீர் வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. அதன் மூலம் அனைத்து குடியிருப்புக்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப் பட உள்ளது.  இந்த காவேரி நீர் வழங்கும் திட்டம் முழுமை பெற சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும் என திட்டமிடப்பட்டுளது.

எனவே இந்த ஐந்தாண்டுகளுக்கு ஏற்கனவே உள்ள அனைத்து குடியிருப்புக்களுக்கும் நீர் இணைப்பு கொடுக்கப்பட உள்ள நிலையில் புதிய குடியிருப்புக்களுக்கும் இணைப்பு கொடுப்பது இயலாத பணி ஆகும். இதை ஒட்டி கர்நாடக மாநில அரசு சார்பில் அமைக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து துணை முதல்வர் பரமேஸ்வரா நேற்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

துணை முதல்வர் பரமேஸ்வரா, “தற்போதுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள குடியிருப்புக்களுக்கு காவிரி நீர் இணைப்பு வழங்க ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலை உள்ளது. இந்நிலையில் புதிய குடியிருப்புக்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க முடியாது. பெங்களூரு நகரில் மற்றும் புற நகரில் பல புதிய அடுக்குமாடி கட்டிடங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு டாங்கர்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரை நம்பி வாழும் நிலை உள்ளது.

இந்த டாங்கர் நீரை பயன்படுத்தும் பலரும் தோல் ஒவ்வாமை உள்ளிட்ட பல சுகாதாரகேடுகளை சந்தித்து வருகின்றனர். எனவே அனைவருக்கும் நீர் இணைப்பு வழங்கும் வரை அதாவது இன்னும் ஐந்து வருடங்களுக்கு பெங்களூரு நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது. எனவே இந்த கால கட்டத்தில் எந்த ஒரு புதிய கட்டிடத்துக்கும் அனுமதி வழங்குவதை நிறுத்த அரசு உத்தேசித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.