பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், மாநிலத்திற்கான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி.

பெரோஸ்பூர் அருகே விவசாயிகள் ஒன்றுகூடி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மேம்பாலத்தில் யூ-டர்ன் போட்டு பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்பினார்.

முன்னதாக பதின்டா விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் மோடி பெரோஸ்பூரில் இருந்து பதின்டா-வுக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கு பஞ்சாப் மாநில முதல்வர் சரஞ்சித் சிங் கானிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியிருந்தார். பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினரிடம் (SPG) விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

சாலைமறியல் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டு ஜலந்தர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ட்ராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பெரோஸ்பூர் நோக்கி விவசாயிகள் திரண்டனர்.

பெரோஸ்பூர் வரவிடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர், விவசாயிகள் திரண்டது குறித்து கேள்விப்பட்ட பா.ஜ.க. வினர் அங்கு திரண்டு விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட இரு தரப்பினரையும் சமாதனப் படுத்தும் முயற்சி தோல்வியுற்றதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த தடியடியில் பா.ஜ.க. தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மண்டை உடைந்து ரத்தம் சொட்டியது.

பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பதின்டாவில் இருந்து டெல்லி திரும்பிய நிலையில், பஞ்சாபில் வன்முறை அரங்கேறி இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.