ஜார்கண்ட்:
ழங்குடியின பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜார்கண்ட் மாநில பாஜக பெண் தலைவர் சீமா பத்ராவை போலீசார் கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர்.

பின்னர், டெல்லியில் வசிக்கும் அவர்களின் மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் வேலை செய்ய சுனிதா அனுப்பி வைக்கப்பட்டார். வத்சலா டெல்லியில் இருந்து மாற்றப்பட்டதும், சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு வந்து, சீமாவின் வீட்டில் பணிபுரிந்தார்.

இந்நிலையில், சுனிதாவை சீமா துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். பல்வேறு கொடுமைகளுக்கு சுனிதா ஆளாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், தனது சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், சீமா சுனிதாவை அடித்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதை பற்றி ஜார்க்கண்ட் அரசின் பணியாளர் துறை அதிகாரி ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து சென்ற போலீசார், சீமாவின் அசோக் நகர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை கடந்த 22-ம் தேதி மீட்டனர்.

சீமாவின் வீட்டில் அனுபவித்த கொடுமைகளை போலீசாரிடம் சுனிதா கூறுகையில், “அங்கு, எனது பற்களை இரும்பு கம்பியால் உடைத்தனர். சூடான பாத்திரங்களால் உடம்பில் சூடு வைத்தனர். எனது நாக்கால் கழிவறையை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தினர்.

எனக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் அறையில் அடைத்து வைத்தனர். ஆனால், பத்ரா தம்பதியின் மகன் ஆயுஷ்மான் என்பவர் என்னை அவருடைய தாயிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்வார். அவரால் தான் நான் உயிருடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தனது வீட்டுப் பணியாளரை கொடூரமாக தாக்கிய ஜார்க்கண்ட் பாஜக தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் குணால் சாரங்கி கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் மற்றும் அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

சீமா ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர் நிச்சயமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்.

மேலும் அவர் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். யாராக இருந்தாலும், நமது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்களை செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற நடத்தையை பாஜக பொறுத்துக் கொள்ளாது” எனக் கூறினார்.