ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதி குறித்த தரவுகளை மூடிமறைக்க முயன்றதில் இருந்தே ஊழல் குறித்து பேச தகுதியற்ற கட்சி என்ற நிலைக்கு சென்று விட்டது என்று குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதி ரூ. 12769,08,93,000 (பன்னிரெண்டாயிரத்து எழுநூற்று அறுபத்து ஒன்பது கோடியே எட்டு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரம்) ல் 47.46 சதவீதம் (ரூ. 6060,51,11,000) பாஜக கட்சிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1609,53,14,000 யும் காங்கிரஸ் கட்சிக்கு 1421,86,55,000 ரூபாயும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 1214,70,99,000 ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ. 2462,47,14,000 மொத்தமாக 23 கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 775.5 கோடி ரூபாயும், திமுக-வுக்கு 639 கோடி ரூபாயும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 337 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்டுள்ள இந்த தேர்தல் பத்திர தரவுகளின் கூடுதல் விவரங்களை அதாவது தேர்தல் பத்திர எண் உள்ளிட்டவற்றை வழங்குமாறு உச்சநீதிமன்றம் தனது புதிய உத்தரவில் கூறியுள்ளது.

இந்த நிலையில் அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களிடம் இருந்து ஆதாயம் பெறவும் பல்வேறு பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்தும் முறையற்ற சேவைகளை வழங்க ‘கிக்பேக்’ எனும் லஞ்சப்பணத்தை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என்ற உத்தம வேஷம் போடுவது இனியும் எடுபடாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.