அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி என்று கூறிய ராகுல் காந்தி அவர்களுக்கு விதிக்கப்படும் இனி இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடாத வகையில் இருக்கும் என்று உறுதியாக கூறினார்.

பாரத் ஜோடோ நியாய யாத்திரை கடைசி கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் நடுவே தானே-வில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த உறுதியை அளித்தார்.

அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களிடம் இருந்து ஆதாயம் பெறவும் பல்வேறு பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பணத்தை சுரண்டிய நிறுவனங்களிடம் இருந்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், பெருநிறுவனங்களிடம் இருந்து அதன் ஷெல் கம்பெனிகள் மூலம் கோடிக்கணக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ஆதாயமடைந்துள்ளது.

பாஜக-வின் இந்த சட்டவிரோத செயல்களை செயல்படுத்தும் கருவியாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியளித்த நிறுவனங்களின் தரவுகள் மற்றும் நிதியளிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளே இதற்கு சான்றாக உள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் காலம் வரும்போது பாஜக-வின் தேவைகளை பூர்த்தி செய்ய சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.

மேலும், இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இனி அரசு அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.