வடகிழக்கு டெல்லியின் காரவால் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாம் சுத்தம் செய்தல், பாதாம் ஓடுகளை உடைப்பது, பாதாம் தரம்பிரிப்பது மற்றும் பேக்கிங் செய்வது உள்ளிட்ட பணிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

 

டெல்லியின் மொத்த பாதாம் கிடங்குகளில் 80 சதவீதம் கரவால்நகர் பகுதியில் உள்ளதையடுத்து பிரகாஷ் விஹார், பகத் சிங் காலனி மற்றும் காரவால் நகரின் நியூ சபாபூர் போன்ற பகுதிகளில் 40 முதல் 60 கிடங்குகள் அமைத்து சிறிய தொழிற்சாலைகள் போல் இந்த பாதாம் தரப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பாதாம் ஓடுகளை உடைப்பது உள்ளிட்ட சில வேலைகளுக்கு இயந்திரங்கள் வந்துள்ளபோதும் பாதாம் தரம் பிரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான வேலைகளை தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

அரசின் அங்கீகாரம் இல்லாமல் எந்த ஒரு உரிமமும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும் இந்த ‘தொழிற்சாலைகளில்’ ஆயிரக்கணக்கானோர் வேலை செய்துவரும் நிலையில் இதனை டெல்லி தொழிலாளர் நலத்துறை கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

காரி பாவோலி பகுதியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய மசாலா சந்தை முதலாளிகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தங்களுக்கு சொந்தமான பண்ணைகளில் இருந்தும் வேறு பண்ணை முதலாளிகளிடம் இருந்து பாதாம் பருப்புகளை வாங்கி இந்தியா தொழிலாளர்கள் மூலம் அவற்றை சுத்தம் செய்து தரம்பிரித்து வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் வியாபாரம் செய்கின்றனர்.

இந்த பெருமுதலாளிகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாதாம் கொட்டைகளை வாங்கி வந்து கரவால்நகர் பகுதி சிறு முதலாளிகள் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதாம் சுத்தம் செய்வதற்கு கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது 2012ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இந்த கூலியை தற்போதுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 12 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு என அனைத்து விலைகளும் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில் தங்களின் ஊதியம் மட்டும் கடந்த 12 ஆண்டுகளாக தேக்கமடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

மாதம் 5,000 முதல் 6,000 ரூபாய் வரை மட்டுமே சம்பளமாகக் கிடைக்கும் நிலையில் வீட்டுவாடகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு பலமடங்கு உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு மாதம் ரூபாய் 25000 சம்பளம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தங்கள் முதலாளிகளிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் இதற்கு செவிமடுக்காத காரணத்தால் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மார்ச் 1 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மார்ச் 11ம் தேதி இவர்கள் நடத்திய பேரணி மீது கூலிப்படையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இவர்களின் போராட்டத்துக்கு காரவால் நகர் மஸ்தூர் யூனியன் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்து ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பாதாம் தொழிற்சாலை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

ஒரு மூட்டை பாதாம் தரம் பிரிப்பதற்கு ரூ. 20 என்று இருந்த நிலை மாறி ஒரு கிலோவுக்கு ரூ. 1 வழங்கப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தை அடுத்து அதை ரூ. 2 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும், ஆண்டுக்கு ரூ. 1 உயர்வு வழங்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது ஆனால் 12 ஆண்டுகளாக தங்களுக்கு வழங்கப்படும் கூலி உயர்த்தப்படாததைக் கண்டித்தும்

1. பாதாம் பருப்புகளை தரம்பிரிப்பதற்கான விலையை கிலோ ரூ.2லிருந்து ரூ.12 ஆக உயர்த்த வேண்டும்.

2. 8 வேலை நேரம் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் கூடுதல் நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

3. இயந்திரம் மூலம் பாதாம் உடைப்பதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.5ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

4. வேலைக்கான சம்பளம் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் வழங்கப்படவேண்டும்.

5. பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.