அகமதாபாத்:

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் பாஜ எம்பி பிரபாத்சின்ஹ் சவுகான் மகன் பிரவின் சின்ஹா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தேக்சந்த் கல்வானி, ஜிதேந்திர கல்வானி, பிரகாஷ் தாக்கர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோத்ரா தெசிலில் மெஹ்லால் கிராமத்தில் உள்ள அவரது வீடு, அலுவுலகங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மொபைல் போன்கள், எல்சிடி டிவி, லேப்டாப் ரூ. .1.1.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிரவின் சின்ஹா கடந்த 2012ம் ஆண்டு கோத்ரா நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன் பின்னர் அவர் கடந்த டிசம்பரில் காங்கிரஸில் இணைந்தார். சொந்த கிராமத்தில் தந்தையும், மகனும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். அதனால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்று போலீசார் தெரிவித்துவிட்டனர்.

‘‘சோதனை நடந்தபோது பிரவின் சின்ஹா வீட்டில் இல்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூதாட்டத்தில் அவரது பங்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்று உள்ளூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சவ்தா தெரிவித்தார். குஜராத் சூதாட்ட தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.