புதுச்சேரி

பெகாசஸ் மென்பொருள் மூலம் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு பாஜக ஆட்சி கவிழ்ப்பு செய்து வருவதாகப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.

நாடெங்கும் பெகாசஸ் விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய பாஜக அரசு இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்த பெகாசஸ் மென்பொருளை வாங்கி உள்ளதாகவும் இதன் மூலம் அனைத்து அலைபேசி அழைப்புக்களையும் ஒட்டுக் கேட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   பல எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி தலைவர்களின் அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமி, ”தற்போது அலைபேசி ஒட்டுக் கேட்பு சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. இஸ்ரேல் நிறுவனமாக உள்ள என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் பலரது அலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.  இதைப் பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு பயன்படுத்தி வருகிறது, பலரது ரகசியங்களைத் தெரிந்துகொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்திற்கு இந்த மென்பொருளைக் கொடுக்கமாட்டோம் என்றும், ஒரு அரசு கேட்டால் மட்டுமே கொடுப்போம் என இஸ்ரேல் நிறுவனம் கூறியுள்ளது.   இதில் இருந்து இந்திய நாட்டில் நரேந்திர மோடி அரசானது பெரிய விலையைக் கொடுத்து அந்த மென்பொருளை வாங்கி அனைவரின் அலைப்பேசியையும் ஒட்டுக்கேட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற நிலைக் குழு வைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.   அதற்கு மோடி அரசு செவி சாய்க்கவில்லை. பாஜக அரசு தவறு செய்த காரணத்தால்தான் உளவுபார்த்த காரணத்தால்தான் அந்த விசாரணைக்கு மோடி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.என்பது ஜனநாயக துரோகம். பெகாசஸ் மென்பொருளை  வாங்கியது யார், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.