ஐதராபாத்: ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில்,  தெலுங்கான மாநில ராஷ்டிரிய சமிதி கட்சி  பெண் எம்.பிக்கு நீதிமன்றம்  6மாதம் சிறைதண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது.  வாக்களிக்க லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக முதன்முறையாக எம்.பி. ஒருவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தெலுங்கானா மாநிலத்தில்  மகாபூபாத் என்ற தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளராக  போட்டியிட்டவர்  மலோத் கவிதா என்பவர். இவர் தனக்கு வாக்களிக்க கோரி  வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர்  அதிரடி சோதனை நடத்தியபோது, அவர் பணம் கொடுத்தபோது பிடிபட்டார்.

இதுதொடர்பான வழக்கு  நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனால்,  மலோத் கவிதா வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை எம்பி ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பெண் எம்.பி.  மலோத் கவிதாவுக்கு  6 மாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது