கொழும்பு

ன்று இந்தியா மற்றும் இலங்கை இடையே இரண்டாம் டி 20 கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டித் தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.  தொடர்ந்து டி20 தொடரிலும் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.   தற்போது இந்தியா டி20 போட்டிகளில் 1-0 என்னும் கணக்கில் உள்ளது.

இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் டி 20 போட்டிகளின் இரண்டாம் ஆட்டம் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் டி 20 தொடரையும் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியில் ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சய் சாம்சன், பிருத்வி ஷா ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த போட்டியில் பந்துவீச்சைப் பொறுத்தவரை புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் தீபக் சஹார், சுழற்பந்துவீச்சாளர் சஹால் ஆகியோர் தங்களுடைய முழு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மட்டும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முழுமையான பார்முக்கு திரும்பவில்லை எனக் கூறலாம். பெரும்பாலும் இந்திய அணியில் இந்தப் போட்டியில் மாற்றம் ஏதும் இருக்காது என்றே தெரிகிறது. ஆயினும் பிருத்வி ஷாவுக்கு பதிலாகத் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே வேளையில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் குறைவு. இந்த அணியில் சாரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ தவிர அந்த அணியில் மற்றவர்களின் பேட்டிங் எடுபடவில்லை. கடந்த ஒரு நாள் தொடரைப் பறிகொடுத்துவிட்ட இலங்கை அணி 20 ஓவர் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே டாப்-3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் நிலைத்து ஆடினால் இந்தியாவை வெல்லலாம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.