சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பாஜக சீன மொழியில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. 

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வருக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தன. அவருக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தமிழக பா.ஜ.க. தங்களின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’சமூக வலைத்தளத்தில் சீனாவின் மாண்டரின் மொழியில் முதல்வருக்குப் பிறந்த நாள் வாழ்த்து பதிவு செய்துள்ளனர். தமிழக பாஜக சீனாவின் மாண்டரின் மொழியில் வெளியிட்ட பதிவில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க.வின் ஊடக பிரிவில் சார்பில், ”நமது முதல்-அமைச்சருக்குப் பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்’ என பா.ஜ.க. ஊடக பிரிவின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .

தூத்துக்குடியில் கடந்த 28-ம் தேதி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த பத்திரிகை விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ராக்கெட் படத்தில் சீன கொடி இருந்தது. பிரதமர் மோடி இதைத் தனது பேச்சின்போது சுட்டிக்காட்டி தி.மு.க.வை விமர்சனம் செய்தார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளம்பரத்தில் சீன கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து இது தெரியாமல் நடந்த தவறு என்றும், இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆயினும் முதல்வரின் பிறந்தநாளன்று சீன மொழியில் பாஜக வாழ்த்துக் கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.