மும்பை

ரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் தீவிரம் அடைந்துள்ளது.

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசம் இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிட்டுள்ளது. ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

பிபோர்ஜோய் புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிர மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.  ‘பிபோர்ஜோய்’ புயல், மேற்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேற்கு-தென்மேற்கில் மையம் கொண்டுள்ள தீவிர புயல் வடக்கில் நகர்ந்து மிக தீவிர புயலாக வலுப்பெற்று பிபோர்ஜோய், கோவாவுக்கு 860 கி.மீ. மேற்கு  தென்மேற்கில் மையம் கொண்டுள்ளது. எனவே அரபிக்கடலில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அரபிக்கடலில் உருவான புயல் தீவிர புயலாக வலுவடைந்ததையொட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.