முஸாஃபர்பூர், பீகார்

முஸாஃபர்பூர் ரெயில் நிலையத்தில் ரூ. 100 கொடுத்தால் வியாபாரிகள் சொல்லும் நடைமேடையில் ரெயில்வே அதிகாரிகள் ரெயிலை நிறுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ரெயில் நிற்கும் போது அந்தந்த நடைமேடைகளில் உள்ள வியாபாரிகளிடம் பல பொருட்களை பயணிகள் வாங்குவது உண்டு.   அதுவும் பெரிய ரெயில் நிலையங்கள் என்றால் பல நடைமேடைகள் இருப்பது வழக்கம். ஒவ்வொரு நடைமேடையிலும் பல கடைகளும் இருக்கும்.     இதே போல பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்பூர்  ரெயில் நிலையமும் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும்.

முக்கியமான ரெயில்கள் எப்போதுமே குறிப்பிட்ட நடைமேடைக்கு மட்டுமே வருவது வழக்கம்.   ஆனால் பாசஞ்சர் ரெயில்கள், இண்டர் சிடி ரெயில்கள் போன்றவைகள் நிற்கும் நடைமேடையை அவ்வப்போது ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்வது வழக்கம்.   இந்த ரெயில்கள் அதிக நேரம் நிற்கும் என்பதால் வியாபாரமும் நன்கு நடைபெறும்.

இந்த ரெயில்களுக்கான நடைமேடை ஒதுக்குவது குறித்து புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.   அந்த புகாருடன் வியாபாரிகளில் ஒருவர் ரெயில்வே அதிகாரி ஒருவருடன்பேசிய ஒலிப்பதிவு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது    அந்த ஒலிப்பதிவில் அவர் வியாபாரி கேட்கும் நடைமேடைக்கு ரெயிலை நிறுத்த ரூ. 100 அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதை தெரிவித்த ரெயில்வே உயர் அதிகாரி இந்த புகார் உண்மை எனக் கண்டறிந்துள்ளதாகவும்  சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் வியாபாரிகள் யார் என்பது தெரிந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.  அவர்கள் மீது விரைவில் துறை சார்ந்த விசாரணை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   அவர்கள் பெயரை வெளியிட மறுத்து விட்டார்.

இதையொட்டி இனி நடைமேடை ஒதுக்கும் முன்பு மேலதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.