வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கர்களுக்கு  அதிபர் பைடன் எச்சரித்துள்ளார்.

கொரோனாவின் புதிய பிறழ்வான ஒமிக்ரான அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் 177 நாடுகளில் பரவி உள்ளது. அதிவேகமாக பரவும் இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்க தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளும் பயனளிக்கவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் ஒமிக்ரான் பாதிப்பால் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் உயிரிழப்புக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள மக்களை வலியுறுத்துவதுடன், பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தவும் முன்வந்துள்ளன.

அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அங்கு டிசம்பர் 1 ஆம் தேதியன்று தினசரி தொற்று  பாதிப்பு 86,000 ஆக இருந்தது. அதுவே அதிவேக ‘மாக பரவி,  டிசம்பர் 14 ஆம் தேதியின் படி 1 லட்சத்து 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில்  70% மக்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இருந்தாலும்  தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா கொரோனா பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தை பதற்றத்துடன் எதிர்கொண்டுள்ளது.  தற்போதைய சூழலில் (குளிர்காலம்) அதிகமானோர் நோய் வாய்ப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மரணங்களும் ஏற்படும்.

இதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. இதனால்,  இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் டோஸை போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.