வெலிங்டன்: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான நியூசிலாந்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்தனர்.

நியூசிலாந்து நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று 79 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், 90% பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். இதனால், கொரோனா தொற்று பரவல் குறைந்ததோடு தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் சரிந்தது. இதனால், அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த பொதுமக்கள் கோரி வருகின்றனர். ஆனால், ஒமிக்ரான் தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதால், அந்நாட்டு அரசு, கட்டுப்பாடுகளை தொடர்ந்து வருகிறது. ஆசிரியர்கள், சுகாதாரம் மற்றும் ஊனமுற்றோர் துறைகள், காவல்துறை மற்றும் பிற பொது சேவைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு அந்நாட்டு மகக்ள்   நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். தலைநகர் வெலிங்டன் நகரில் கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டபடியும், பதாதைகளையும் பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  விடுதலை வேண்டும் என்று அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி முகக்கவசங்கள் அணியாமல் அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சில இடங்களில் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.