சென்னை : தமிழ்நாடு முழுவதும் 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடை பெற உள்ளது.

கொரோனா தொற்று பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. இந்தநிலையில், தற்போது ஒமிக்ரான் என்ற பிறழ்வு தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டிலும் தீவிரமாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தினசரி அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், வாரம் ஒரு முறை மெகா கேம்ப் நடத்தி, ஒரே நாளில் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 93 லட்சம் பேர் காலக்கெடு முடிந்து 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் தற்போது 75 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதனால் 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு, இதுவரை வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்திய உள்ள நிலையில், நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசிகள் போடப்படும் என்றும்,  தடுப்பூசி முகாம்களில்,  காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இதுவரை 8 லட்சத்து 26 ஆயிரத்து 471 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அந்தவகையில் 87 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 63 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.