சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 70 பயணிகளில் 28பேருக்கு ஒமிக்ரான் எஸ்-ஜீன் அறிகுறி உள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும்  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் என்ற வீரியமிக்க தொற்று அதிவேகமாக பரவக்கூடியது என மருத்துவ துறை வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த தொற்று தடுப்பூசி போட்டவர்களையும் தாக்குவதால், முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்தியாவில்  தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் இதுவரை 135 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும், 93 லட்சம் பேர் காலக்கெடு முடிந்து 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்ற பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது.

இந்தநிலையில், தற்போது பரவி ஒமிக்ரான் என்ற பிறழ்வு தொற்று பொதுமக்களை மேலும் பீதியடைய செய்துள்ளது. இந்தியாவில் 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நைஜிரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அதில், 10 பேர்களின் சோதனை முடிவு வெளி வந்துள்ளதாக தெரிவித்தார்.

இவர்களில் பலருக்கு  டெல்டா வகை வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 28 பேருக்கு ஒமிக்ரான அறிகுறியான எஸ்-ஜீன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றார். எஸ்-ஜீன் டிராப்அவுட் சோதனை சர்வதேச பயணிகளுக்காக முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்தியஅரசிடம் அனுமதி கேட்க இருப்பதாக தெரிவித்தவர், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், தனிமைப்படுத்தலுக்கு பின்பு எடுக்கப்படும் சோதனையில் தொற்று அறிகுறி இல்லை என்றால் பிரச்சினை இல்லை என்றும் தெரிவித்தார்.