பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த போது மிகப்பெரிய மாற்றம் பிறக்கப்போவதாக துள்ளிக்குதித்த யாரும் நாட்டு மக்களுக்கு இதுபோன்ற நெருக்கடிநிலை ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். 500, 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த அரசு பழைய நோட்டுக்களுக்கு இணையான மாற்றை கொடுத்திருந்தால் இவ்வளவு சிக்கல்கள் ஏற்ப்பட்டிருக்காது.

barter

பழைய நோட்டு செல்லாது, அதே சமயத்தில் புதிதாக கொடுக்க கரன்சி இல்லை என்ற நெருக்கடியிலையில் சில்லறை வணிகங்கள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளன. இதுபோன்ற சுழலில் வாழவும் வயிற்றை நிரப்பவும் வழியறியாத மக்கள் பல இடங்களில் நமது மூதாதயர் கற்றுக்கொடுத்த பல நூற்றாண்டு பழமையான பண்டமாற்ற முறைக்கு திரும்பி வருகின்றனர்.
ரேமண்ட் ஜோங் மற்றும் கரண் தீப் சிங் ஆகிய இரு பத்திரிக்கையாளர்கள் தாங்கள் இது குறித்து திரட்டிய செய்திகளை வால் ஸ்டிரீட் ஜெர்னல் என்ற பிரபல இணைய பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்ட தகவலாவது:
ஒடிசா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குலியா என்ற கிராமத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான பகிரத் பாரிக்கிடம் மக்கள் அரிசி, தேன் மற்றும் தோல்(லெதர்) ஆகியவற்றை கொடுத்து காய்கறி வாங்கிச் செல்லுகின்றனர். ஒரு கிலோ உருளைகிழங்கு, காலிபிளவர் மற்றும் தக்காளிக்கு இணையாக அரை லிட்டர் தேனை கொடுத்து ஒருவர் வாங்கிச்சென்றதாக அவர் குறிப்பிட்டார். இது தனக்கு நல்ல டீல் என்று மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார். தேன் மட்டுமன்றி அவரவரிடம் மிகுதியாக இருக்கும் அரிசி அல்லது லெதர் போன்ற பொருட்களும் பண்டமாற்றாக வருவதாக அவர் தெரிவித்தார்.
இதுபோல பல இடங்களிலும் நடக்க தொடங்கியிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒடிசாவிலுள்ள சுடாப்பாலி கிராமத்தை சேர்ந்த த்ருபந்தனி நாஹாக் என்பவர் எங்களிடம் பணமே இல்லை. அறுவடைக்குப் பின் அரிசி எங்களிடம் மிகுதியாக இருப்பதால் அதை மாற்றாக கொண்டு உருளைக்கிழங்கு, எண்ணெய், உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் அயாத்பூர் கிராமத்தை சந்தியாராணி சாஹூ தனது மகளது திருமணத்துக்கான ஆடைகளை தங்க காதணிகளை மாற்றாக கொடுத்து வாங்கியதாக தெரிவித்தார்.
பீகாரை சேர்ந்த விவசாயி சங்கர் மஹாத்தோ என்ற விவசாயி தனது மகளின் திருமணத்துக்கு இனிப்புகள் செய்வதற்காக தனது பக்கத்து வீட்டு பால்காரரான விரேந்திர குமாரிடம் ஐந்து நாள் முழு பால் சப்ளைக்கு தேவையான காய்கறிகளை கொடுத்து மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராம் மெஹர் 25 கிலோ அரிசியை கொடுத்து தனது குடும்பத்தினருக்கு துணிமணிகள் வாங்கியதாக தெரிவித்துள்ளார். நிலமையை இப்படித்தான் சமாளிக்க வேண்டியதாய் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
கிராமங்களில் வங்கிகள் குறைவு, பெரு நகரங்களுக்கே இன்னும் புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம் சென்று சேராத வேளையில் கிராமங்களில் உள்ள வங்கிகள் பணத்துக்கு எங்கே போகும்? அவர்களுக்கு பண்டமாற்று முறையை தவிர வேறு வழியில்லை இப்படி அவர்களால் சமாளித்துக்கொள்ள முடியும். ஆனால் பெருநகரங்களில் உள்ள மக்களின் நிலை?!….
Courtesy: Raymond Zhong and Karan Deep Singh | Wall Street Journal