தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய டேயோங் ஜங் மனு செய்துள்ளார்.

டேயோங் ஜங் மற்றும் டெல்லி பார் கவுன்சில் இடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சட்டப்போராட்டத்தை அடுத்து மாநில பார் கவுன்சில்களின் கருத்தை அறிய இந்திய பார் கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.

தென்கொரிய பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம்பெறும் இந்திய குடிமகன் அந்நாட்டு நீதிமன்றத்தில் பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது, அதனால் தனக்கும் டெல்லி நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்ற அனுமதி வழங்கவேண்டும் என்று பார் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் டேயோங் ஜங் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வழக்கறிஞர் சட்ட விதி செக்சன் 24ன் படி தகுதி அடிப்படையில் வெளிநாட்டு நீதிமன்றத்தில் இந்திய குடிமகன் ஒருவரை வழக்கறிஞராக நியமிக்க அனுமதி அளிக்கும்பட்சத்தில் அந்த நாட்டு குடிமகனை தகுதி அடிப்படையில் இந்திய நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விதியின் அடிப்படையில் தென் கொரியாவைச் சேர்ந்த ஒருவர் இங்கு வழக்கறிஞராக பணியாற்ற தற்போது விண்ணப்பித்துள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பார் கவுன்சிலுக்கும் அவர்களது கருத்தை கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 21ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் வர இருப்பதால் அதற்கு முன்னதாக தங்கள் கருத்தை தெரியப்படுத்துமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.