பனாஜி: கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வலுவிலந்து வரும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், கோவா மாநிலத்தில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கோவாவில் கடந்த மார்ச் மாதம்  நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.40 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றியது.  பாஜகவைத் தொடர்ந்து, 11 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. ஆனால், ஆட்சி அமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 3 சுயேச்சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தன. இதனால் அங்கு பாஜக 2வது முறையாக ஆட்சி அமைத்து. மாநில முதல்வராக  பிரமோத் சாவந்த் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கோவா காங்கிரஸின் எம்எல்ஏக்களான திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலிக்சோ செக்வேரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 8 பேர்  பாஜகவில் இணைந்தனர். இதனால் கோவாவில் காங்கிரஸ் பலம் 3-எம்எல்ஏக் களாகக் குறைந்துள்ளது.