மேல் மருவத்தூர்

மேல் மருவத்தூரில் மறைந்த பங்காரு அடிகள் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது.

நேற்று மாலை மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். சுமார் 82 வயதாகும் பங்காரு அடிகளாரைப் பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்துவந்தனர்.

அவர் உடல்நலக் குறைவு காரணமாகக் கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அடிகளின் மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல் மருவத்தூரில் குவிந்தனர்.

இன்று பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.முதல்வர் மு க ஸ்டாலின்  பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.  அடிகளார் இறுதி சடங்கு நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

 பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வழக்கமாக பங்காரு அடிகளார் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.