சென்னை,

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல், நடிகர் சத்யாராஜ் நடித்துள்ள பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்திருந்தார்.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரின் நடித்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது பாகுபலி-2.

வரும் 28ந்தேதி பாகுபலி-2 படம்  இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அன்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும்,  பாகுபலி -2 திரையிடப்படும் திரையங்குகளின் முன் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தை தடை செய்வதால் சத்யராஜுக்கு நஷ்டமில்லை என்றும் படக்குழுவின ருக்குத்தான் நஷ்டம் ஏற்படும் என்று கூறி இயக்குநர் ராஜமவுளி கன்னடர்களிடம் கெஞ்சியுள்ளார்.

 

வரும் 28ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இயக்குனர் ராஜமவுளி  தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டு பிரச்னையைத் தீர்க்க முயன்றுள்ளார்.

அதில், நடிகர் சத்யராஜ் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும்.  அதை அவர் 9 ஆண்டு களுக்கு முன்பே தெரிவித்திருந்தார் என்று  குறிப்பிட்டுள்ள ராஜமவுளி, தற்போது பாகுபலி-2 படத்தை தடை செய்வதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.  படக்குழுவினருக்குத்தான் பெரிய இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மேல் நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் தலையிடும் எண்ணமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகுபலி -2 திரைப்படத்தில் கட்டப்பா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.