சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு அயோத்தியா மண்டபத்தை நடத்தி வந்தது. இங்கு, ராம் லஷ்மண, சீதை அனுமார் பஞ்சலோக விக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கு கருங்கல் சிலை வைத்து வழிபாடு நடக்கிறது. மேலும் அடிக்கடி பஜனைகள் நடைபெற்று வருகிறது.  இதை தமிழகஅரசின் அறநிலையத்துறை  கையகப்படுத்தியது.

முன்னதாக, ராம் சமாஜ், நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2014-ல் அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்த முடிவு செய்தது. இதை எதிர்த்து, ராம் சமாஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. . இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அறநிலையத்தறை கையகப்படுத்தியது சரிதான் என்றும், இதில் எந்தவொரு தனிப்பட்ட அமைப்புகளும் தலையிட முடியாது எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்று சென்னை அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கையகப்படுத்த வந்தனர். இதை கண்டித்து மடத்தின் வாயிலை பூட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று காலை அயோத்தியா மண்டபத்தை ஆய்வு செய்து கையகப்படுத்த வந்தனர். இதற்கு எதிர்ப்புதெரிவித்து பாஜகவினர் குவிந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

அப்போது, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அயோத்தியா மண்டப பஜனை மடத்தின் வாயில் கதவை பூட்டி வெளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அயோத்தியா மண்டபத்தை பார்வையிட வந்த அறநிலையத் துறை அதிகாரிகளை, உள்ளே அனுமதிக்கவில்லை. இதை தொடர்ந்து, அவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். முன்னதாக, கவுன்சிலர் உமா ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் பஜனை மடத்தைஅறநிலையத் துறை கைப்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் பஜனை மடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இந்த மடத்துக்கு நியமனம் செய்யப்பட்ட செயல் அலுவலரின் நியமனம் செல்லாது. இங்கிருப்பது கோயில் அல்ல. அறக்கட்டளையின் பஜனைமண்டபம். 2014-ம் ஆண்டு இந்துசமய அறநிலைத் துறை மடத்தை கைப்பற்றியவுடன் நாங்கள் தடை வாங்கி விட்டோம். தற்போது மீண்டும் அவச ரகதியில் கைப்பற்றும் முயற்சி நடக்கிறது. இது சட்டத்துக்கு புறம்பானது’ என்றார்.

இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நீதிமன்றம் அயோத்தியாமண்டபத்தை கையகப்படுத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. அதன்பிறகு, உரிய காலக்கெடு கொடுத்தும் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தையோ, அறநிலையத் துறையோ நாடவில்லை. அதனால், அனைத்து சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி தான் நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்றார்.

இந்த நிலையில்,இதனை எதிர்த்து தொடரப்பட்ட்ட மேல்முறையீடு வழக்கில்,சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கும்,அறநிலையத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து,பக்தர்கள் தொடர்ந்து அயோத்தியா மண்டபத்திற்கு சென்று வழிபட அனுமதிக்கப்படும் என்றும்,அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளியை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.இதனையடுத்து,இந்த வழக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி இறுதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.