amadoss may
வணிகர் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’உரிமைகளை வலியுறுத்தும் வணிகர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள வணிகப் பெருமக்களுக்கும், வணிகர் அமைப்புகளுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது சில்லறை வணிகம்தான். தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் சில்லறை வணிகத்தையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அண்மைக்காலமாக சில்லறை வணிகம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. மத்தியில் இருந்த அதிகாரத்தை இந்த நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த சுயநலமிகள் இப்போது வணிகர்களின் தோழராக தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் அவல நிலை தான் தமிழகத்தில் இப்போது நிலவுகிறது.
வணிகர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களும், அதிகாரிகள் தரப்பிலிருந்து தரப்படும் குடைச்சல்களும் எண்ணிக்கையில் அடங்காதவை. அதனால் தான்…..
* வரிச் சீர்திருத்தம் தொடர்பான வணிகர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
* சிறு வணிகர்களுக்கு கடன் அட்டை மற்றும் பற்று அட்டைகளை தேய்க்கும் எந்திரங்களை வங்கிகளின் மூலம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான மானியத்தை தமிழக அரசே வழங்கும்.
* சிறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இலவசக் காப்பீட்டு வசதி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி அவற்றை நிறைவேற்ற பா.ம.க. உறுதியேற்றிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் வணிகர்களின் பங்கு அதிகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். நாட்டுக்காக உழைக்கும் அவர்களின் வாழ்க்கையில் இனி மகிழ்ச்சி மற்றுமே நிலவுவதை உறுதி செய்யும் ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரும்; அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரி வணிகர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வணிகர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.