கருத்துக்கணிப்புகள் சரிதானா?  : “தராசு” ஷ்யாம் பேட்டி

Must read

ஊடக குரல்:
லரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி.   அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது.
இந்த பகுதியில் இப்போது…  “தராசு” வார இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஷ்யாம் அவர்களின் பேட்டி..
 

ஷ்யாம்
ஷ்யாம்

ஊடகத்துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
மதுரை பல்கலையில் பி.எஸ்.சி. (வேளாண்மை) படித்துக்கொண்டிருந்த போதே தமிழின் மீது எனக்கு மிகவும் ஆர்வம். அப்போதா   தெ.பொ. மீனாட்சி சுந்தரம் துணை வேந்தராக இருந்தார். தமிழ் ஆர்வலரான அவர், மாணவர்களின் தமிழார்வத்தை மிகவும் ஊக்கப்படுத்தினார்.
மதுரை பல்கலை கழக அளவிலான பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றேன்.  அதே போல மதுரை, சென்னை, சென்னை பல்கலை அளவில் (அப்போது இந்த மூன்றே பல்கலைகள்தான் தமிழகத்தின் இருந்தன.) நடந்த பேச்சு போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன்.  கட்டுரை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றது உண்டு. கல்லூரி ஆண்டு மலருக்கும் பொறுப்பாளனாக இருந்தேன்.
பி.எஸ்.சி. முடித்த பிறகு,  விவசாய அதிகாரியாக ஒருவருடம் அரசு பணியில் (1971ம் வருடம்) பணியாற்றினேன்.  பிறகு தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் மண்டல வேளாண் நிபுணராக பணியில் சேர்ந்தேன். அதோடு, அந்த நிறுவனம் சார்பாக வெளியான “பண்ணை செய்தி” என்கிற தமிழ் இதழுக்கும் அதன் ஆங்கில பதிப்புக்கும் துணையாசிரியராக இருந்தேன். தமிழில் வெளியான முதல் வேளாண் இதழ் அது.
அந்த இதழை மேம்படுத்த, அமெரிக்கா சென்று இதழியல் படிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்தது.  அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் டன்லாஸ் நகரில் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் கல்வியகத்தில் சேர்ந்து  ஒரு வருடம். பயின்றேன். பிறகு இந்தியா திரும்பி, ஸ்பிக் பணியைத் தொடர்ந்தேன்.
“ஆக்ஸிடண்டல்” ஆக நடந்தது என்று சொல்வார்களே.. அது போல எனக்கொரு சம்பவம் நடந்தது.  ஒருமுறை சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, எனது கல்லூரிக்காலத்து சீனியரான  வலம்புரிஜான் எனது எதிர் சீட்டில் வந்தமர்ந்தார்.
வலம்புரி ஜான்
வலம்புரி ஜான்

பல வருடம் கழித்து அவரைப் பார்த்தில் அளவற்ற மகிழ்ச்சி எனக்கு. அவருக்கும்தான். உற்சாகமாக பேசிக்கொண்டே வந்தோம். பேச்சு வாக்கில் நான், ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றுவதைச் சொன்னேன்.
அவர், “தமிழில் ஆர்வமும் திறமையும் உள்ள நீ, இப்படி ஏதோ ஒரு நிறுவனத்தில் காலத்தைக் கழிக்கலாமா?  முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள். துவக்கியுள்ள தாய் வார இதழில் ஆசரியராக இருக்கிறேன். நீயும் வா” என்று அழைத்தார்.
பிறர் மீது நேர்மையான அன்பு செலுத்தக்கூடியவர் வலம்புரிஜான். தனக்குத் தெரிந்ததை அப்படியே பிறருக்கு கற்றுத்தருவதில் அவருக்கு நிகர் அவர்தான். அவர் எனக்கு குருவாக இருந்தார். பலரை உருவாக்கியவர் அவர். நக்கீரன் ஆசிரியர் கோபால், தாய் வார இதழில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர்தான்.
எனக்கும் ஆர்வம். ஆனாலும், மனதில் ஏதோ சிறு குழப்பம். ஆகவே ஸ்பிக் வேலையை முழுமையாக விடாமல், ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு, தாய் வார இதழில் துணை ஆசிரியராக சேர்ந்தேன்.
தாய் வார இதழுக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி . ஜானகிதான் முதலாளி.  எம்.ஜி.ஆரும் அவ்வப்போது அலுவலகம் வருவார்.
சிறு வயதிலேயே எனக்கு எம்.ஜி.ஆர். மீது பிரமிப்பு உண்டு. கல்லூரிக்காலங்களிலும் நாங்கள் தி.மு.க. ஆதரவாளர்களாகவே இருந்தோம். (அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார்.)
இதெல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஸ்பிக் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர பத்திரிகையாளரானேன்.
ஒரு கட்டத்தில் தனியாக பத்திரிகை நடத்தலாம் என்று “திரைச்சுவை” என்கிற சினிமா வார இதழைத் துவங்கினேன். அதை தாய் அச்சகத்தில்தான் அச்சடித்தோம். அதற்கு வலம்புரிஜான் முழு உதவி புரிந்தார்.
பிறகு வெளியில் அச்சடிக்க ஆரம்பித்தோம். இதற்கிடையே எனக்கு அரசியல் வார இதழ் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போனது. 1984ம் ஆண்டு, தராசு வார இதழைத் துவங்கினேன்.
 
பாரதி
பாரதி

தராசு என்று பெயர் வைக்க குறிப்பிட்ட காரணம் உண்டா?
தராசு என்பது பாரதியின் புனைப்பெயர்களில் ஒன்று. வசன கவிதைகளை இந்த பெயரில்தான அவர்  எழுதியிருக்கிறார்.  அதனால் தராசு என்று வைத்தேன். முழுப்பெயர், அரசியல் தராசு.
அரசியல் இதழாக இருந்தாலும் திரைச் செய்திகள், நகைச்சுவை என்றெல்லாம் இருக்கும். ஆனால் இவை இல்லாமல்  தராசு வெளியானது.  இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
இதழியல் படிப்புக்காக அமெரிக்கா சென்றேன் அல்லவா. அங்கு படிப்பு முடிந்ததும் மூன்று மாதங்Kள். Dallas chronicle  என்ற அமெரிக்க இதழில் பயிற்சிக்காக சேர்ந்தேன்.  அது தினசரி வெளியாகும் துப்பறியும் இதழ். அதில் சமூக அரசியல் செய்திகள் மட்டுமே இருக்கும். நகைச்சுவை, சினிமா செய்திகள் இருக்காது. அதை முன்னோடியாக வைத்துத்தான், தராசு இதழை துவங்கினேன்.  திரைச்சுவை என்கிற சினிமா பத்திரிகையை ஏற்கெநவே நான் நடத்திவந்தாலும், தராசு இதழில் சினிமாவே கிடையாது.
அப்போது என் நலம் விரும்பிகள் அனைவருமே, “இது புதிய பாணியாக இருக்கலாம். ஆனால் இது ரிஸ்க்” என்றார்கள். அவர்களில் ஒருவர் என் நண்பர் திரைப்பட நடிகர் ராதாரவி. என் அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம், “சினிமாதாம்பா தமிழ்நாடு…  அது இல்லாமல் இதழா.. யோசித்துச் செய்” என்பார். நான், “நிச்சயம் சக்ஸஸ் ஆகும்ணே” என்று நம்பிக்கையோடு பதில் சொல்வேன்.
தராசு இதழ் எப்போது பரவலாக எல்லோராலும் கவனிக்கப்பட ஆரம்பித்தது?
ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இருந்தது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இப்படி ஓர் இதழை வாசகர்களை ஏற்கச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் நாளாக நாளாக வாசகர்கள் தராசு இதழின் பாணிக்கு வந்தவிட்டார்கள். பெரிய அளவில் வெற்றி பெற்றது தராசு இதழ்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்….
சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்கிறார்
சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்கிறார்

 
முதல்வர் எம்.ஜி.ஆர்.  அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து பதவி ஏற்ற நேரம்.  “அலிபாபாவும் 24 மந்திரிகளும்”  என்று அப்போதைய அமைச்சரவையை பற்றி தராசு இதழில் செய்தி வெளியிட்டேன். மந்திரிகள் செய்யும் தகிடுதத்தம் பற்றி விரிவாக எழுதி இருந்தேன். அந்த இதழ் வந்த சில நாட்களில் பத்து மந்திரிகளை நீக்கினார்.  இது தராசு இதழுக்கு மக்களிடையே பெரும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது. தராசு செய்திகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
விடுமுறையில் பத்திரிகையாளனாக “தாய்” வார இதழுக்கு வந்த என்னை முழு நேர பத்திரிகையாளனாக்கிய உந்து சக்தியாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.தான். அதே போல தராசு இதழ் முழு வீச்சில் செயல்பட உந்து விசையாக இருந்தவரும் எம்.ஜி.ஆர்.தான்.
தராசு கருத்துக்கணிப்புகளுக்கு அப்போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.  அது பற்றிச் சொல்லுங்களேன்..
1989 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கருத்து கணிப்பு வெளியிட்டோம். திமுகதான் ஆட்சிக்கு வரும், ஜெயலலிதாதான் எதிர்க்கட்சி தலைவர் என்று முடிவுகளை வெளியிட்டோம்.  அப்போது காங்கிரஸ் தனித்து நின்றது. முதல்வர் வேட்பாளரைப்போல் ஜி.கே.மூப்பனார் அக்கட்சியால் முன்னிறுத்தப்பட்டார். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பலமுறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் வென்று மூப்பனார் முதல்வர் ஆவார் என்றும் பலர் நினைத்தனர்  அது நடக்காது என்பதையும் எங்களது கருத்துக்கணிப்பில் வெளியிட்டோம். அதெல்லாம் அப்படியே நடந்தது.
அ.தி.மு.கவில் இரட்டைப்புறா சின்னத்தில் நின்ற ஜானகி அணி  ஒரு இடம் கூட வராது என்றோம். ஆனால் பி.ஹெச். பாண்டியன் மட்டும் சேரன்மாதேவி தொகுதியில் வென்றார். அதுதான் நாங்கள் எழுதியதில்  சற்று மாறி நடந்த விசயம்.
ஒரே தேர்தலுக்கு இருமுறை கருத்துக்கணிப்பு நடத்தவேண்டிய அவசியம் 1991ம் ஆண்டு நடந்தது. அப்போதைய தேர்தலின் போது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டோம்.  அதில் தி.மு.க.வுக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் இருந்ததை உணர முடிந்தது. 89ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது அல்லவா.. அது தி.மு.க. மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையும் வெளியிட்டோம். அப்போது சசிகலா நடராஜன் என்னை தொடர்புகொண்டு, “தி.மு.கவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு வெளியிட்டுவிட்டீர்களே” என்று வருத்தப்பட்டார். அவரிடம் நான், “மக்களின் கருத்தை வெளியிட்டோம்” என்றேன்.
அடுத்த சில நாட்களில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். தேர்தல்  கிட்டதட்ட ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.
முழுவதுமாக தி.மு.க.வுக்கு எதிரான அலை மக்களிடையே வீசுவதை உணர்ந்தோம். அந்த கணிப்பையும் வெளியிட்டோம். அது போலவே நடந்தது.
படுகொலை என்பது மட்டுமல்ல… சிறு சம்பவங்கள் கூட மக்களின் “வாக்கு மனநிலை”யை மாற்றிவிடும்.
கருத்துக்கணிப்புகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
கருத்து கணிப்பில் சார்பு நிலை இருக்கக்கூடாது. உட்கார்ந்த இடத்தில் இருந்து நடத்தக்கூடாது. மக்களிடம் செல்ல வேண்டும். அதே போல மக்களிடைய ஒரு படிவத்தை நீட்டி அதை பூர்த்தி செய்யும்படி சொல்வதால் மட்டுமே முழுமையான கருத்தை தெரிந்துகொள்ள முடியாது.
நமது கேள்விகளுக்கு உண்மையச் சொல்ல வேண்டாம் என்று நினைக்கும் மக்களும் உண்டு. யாருக்கு ஓட்டுப்போடுவீர்கள் என்று நாம் கேட்டால்,  மனதில் எக்ஸ் என்பவரை வைத்துக்கொண்டு,  நம்மிடம் ஒய் என்பவர்களும் உண்டு.  இது மனித சுபாவம். என்பார் Dallas chronicle  ஆசிரியர் ஜார்ஜ்.
ஆகவே, மக்களிடம் குறுக்கு கேள்விகளைக் கேட்க வேண்டும்.  அதாவது இன்னாருக்கு ஓட்டுப்போடுவேன் என்று சொல்பவர்களிடம், கடந்த தேர்தலில் யாருக்கு போட்டீர்கள் என்கிற கேள்வியையும் முன் வைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட கேள்விகளால் ஓரளவு சரியான பதிலை பெற்றுவிட முடியும்.
தராசு என்றவுடனே, அதன் அச்சகம் தாக்கப்பட்டதும் இரு ஊழியர்கள் இறந்ததும்தான் நினைவுக்கு வரும். அந்த சம்பவத்தின் போது நடந்தது என்ன?
அந்த சோக சம்பவம் நடந்தது 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி.   பாக்ஸர் வடிவேலு தலைமையிலான  ரவுடிக்கும்பல், தராசு இதழின் அச்சகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.  மாடியிலிருந்து இரு ஊழிர்கள் கீழே வீசப்பட்டதில்  பலியானார்கள் என்று சொல்லப்பட்டது.
இந்த வழக்கை நடத்திய தமிழ்நாடு காவல்துறை,  முந்தைய உள்துறை செயலாளர் நாகராஜ், பாக்ஸர் வடிவேலு உட்பட 15, 16 பேரை கைது செய்தது. பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம். சி.பி.ஐ. இந்த வழக்கை எடுத்து நடத்தியது.
இந்த சம்பவம் நடந்த பிறகு, பாக்ஸர் வடிவேலுவை எதேச்சியாக  பார்க்க நேர்ந்தபோது, “அண்ணே.. நாங்க கொலை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் அங்கு செல்லவில்லை. இடப் பிரச்சினை..  இடத்தை காலி செய்யவேண்டும்” என்று சொல்லித்தான் அனுப்பினார்கள். நாங்களும் லேசா பிரச்சினை செய்துவிட்டு வந்துவிடலாம் என்றுதான் போனோம்.
ஆனால் இரு ஊழியர்கள் பயந்துகொண்டு கீழே குதித்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் பலியானார்கள்.  நாங்கள் அவர்களை தூக்கி வீசவில்லை” என்றார்.
அதே போல ஒரு முறை, விமானத்தில் எதிர்பாராதவிதமாக நாகராஜ் என் அருகாமை சீட்டில் பபயணித்தார். அவரும், “இந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தி.மு.க. ஆட்சியில் நான் முக்கிய பொறுப்பில் இருந்தேன். சம்பவம் நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அப்படி இல்லை. தவிர எப்போதுமே நான் இது போல அதிரடியாக நடந்துகொண்டதில்லை” என்றார்.
சி.பி.ஐ. ஆட்கள், இந்த கொலைகள் குறித்து தீவிரமாக விசாரித்தார். மம்முட்டி நடித்த பிரபல மலையா படமான, “ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு” படத்தில் வருமே..  மாடியிலிருந்து விழுந்த இறந்தவரின் எடை, உருவத்துக்கேற்ப பொம்மையை  அதே இடத்திலிருந்து கீழே போட்டு பரிசீலித்தார்கள்.  இதை டிராப் (trop) டெஸ்ட் என்பார்கள். இதை செய்து பார்த்தார்கள். எனக்கும், பாக்ஸர் வடிவேலுவுக்கும் உண்மையறியும் சோதனை நடத்தினார்கள்.
முடிவில், அந்த இருவரையும் மாடியிலிருந்து யாரும் தூக்கிவீசவில்லை. பயத்தில் தாங்களாகவே குதித்துவிட்டார்கள் என்றார்கள்.
அதன் பிறகு சி.பி.ஐ. விசாரணை என்ன ஆனது?
இந்த சம்பவத்தின் பின்னணி யார் என்பதை அறிய சி.பி.ஐ. விசாரணை நீண்டது. டி.சியாக இருந்த சண்முகநாதனிடம் போய் நின்றது விசாரணை. ஆனால் அதற்கிடையே அவர் இயற்கை மரணம் அடைந்துவிட்டார். ஆகவே விசாரணை அத்தோடு முடங்கியது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள்?
தாக்குதல் நடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றிருந்தது. அந்த அரசைப் பற்றி அப்போது நாங்கள் பெரிதாக எழுதவில்லை. பின்னாட்களில்தான் எழுதினோம். ஆகவே அவர்கள் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் முக்கி பொறுப்பு வகித்த நாகராஜை பலமுறை ஆதாரங்களோடு குற்றம் சாட்டி எழுதியிருக்கிறோம். ஆனால் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் அவர் இதற்கு காரணமாக இருப்பாரா என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் இந்த வழக்கில் அம்புகள்தான் பிடிக்கப்பட்டன. எய்தவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சி.பி.ஐ.யாலேயே முடியாத போது நான் எப்படி கண்டுபிடிக்க முடியும்?
பேட்டி: டி.வி.எஸ். சோமு
(தொடரும்..)

More articles

1 COMMENT

Latest article