ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு தேதி அறிவிப்பு?

Must read

 
0
டில்லி:  சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நான்கு நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா ஐந்து நாட்களும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் நான்கு நாட்கள் வாதிட்டார். கடந்த மாதம், 27ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே நான்காவது நாளாக தனது வாதத்தை எடுத்துரைத்தார்.  இதை தொடர்நது வழக்கு மே மூன்றாம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
இன்று  நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கியதும்  சிறிது நேரம், சேகர் நாப்டே தனது வாதங்களை முன் வைத்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா பதில் வாதத்தை முன்வைத்தார்.
அவர், “ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது” என்று ஆச்சாரியா வாதம் செய்தார். நாளையும் தொடருகிறார்.
வியாழக்கிழமைவரை கர்நாடக தரப்பு தனது பதில் வாதத்தை முன் வைக்கும் என்றும் ஆச்சாரியா தெரிவி்த்துள்ளார்.
கர்நாடக தரப்பு வாதம் வியாழக்கிழமை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

More articles

Latest article