புதுடெல்லி: இத்தாலி நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சூறையாடப்பட்டதற்கு, இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகரம் ரோமிலுள்ள இந்திய தூதரகத்தை, சிலர் சூறையாடினார்கள். அவர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஏனெனில், இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. ‘காலிஸ்தான் வாழ்க’ என்ற வாசகங்களும் சுவர்களில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வன்முறை குறித்து இந்திய அரசு, தனது கடும் கண்டனத்தை இத்தாலியிடம் பதிவு செய்துள்ளது.

மேலும், அதுதொடர்பான தனது கவலையையும் இந்தியா பதிவுசெய்துள்ளது. இந்திய துாதரகத்தையும், துாதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு, இத்தாலி அரசுக்கு உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள மத்திய அரசு, வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை, பிரிட்டன் அரசு சிறப்பாக கையாண்டதையும், இத்தாலி அரசின் கவனத்திற்கு, மத்திய அரசு எடுத்துச் சென்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.