ஜெய்ப்பூர்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டு ரூ.10ஆயிரம் பண உதவி, விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் , சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் உள்பட பல்வேறு அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரசாரத்திற்கு இன்றுடன் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை. அதாவது ‘ஜன் கோஷ்னா பத்ரா’  இன்று வெளியிட்டது.

ஜெய்ப்பூரில் உள்ள மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மாநில முதல்வர் அசோக் கெலாட் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு,  பஞ்சாயத்து அளவில் ஆட்சேர்ப்புக்கான புதிய திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்கள் குறித்தும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நவம்பர் 25ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தால், ராஜஸ்தான் மக்களுக்கு ‘ஏழு உத்தரவாதங்களை’  மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

 • விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். 
 • குடும்பத் தலைவிக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் கௌரவத் தொகை.
 • 1.04 கோடி குடும்பங்களுக்கு 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்கள்.
 • கால்நடை வளர்ப்பவர்களிடம் இருந்து சாணம் கிலோ ரூ.2க்கு கொள்முதல்.
 • சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக மாற்றப்படும்
 • அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான சட்டம்.
 • அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்/டேப்லெட்டுகள்.
 • இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய ஒரு குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வரை காப்பீடு.
 • சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
 •  10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.  அதில், 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும்.
 • பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும்.
 • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
 • கடந்த தேர்தலின்போது நாங்கள் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில், 96% வாக்குறுதிகளை (2018ல் அளித்த) நிறைவேற்றியுள்ளோம் 
 • “வட இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தானின் பொருளாதாரம் ஆண்டு இறுதிக்குள் ரூ. 15 லட்சமாக இருக்கும், 2030க்குள் ரூ. 30 லட்சம் கோடியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  உள்பட ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கினார். “அவர் எங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ராகுலை அவதூறாக பேசி வந்தார். அவர் என்னை துஷ்பிரயோகம் செய்தார். அசோக்கை (கெஹ்லாட்) துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துள்ளார். நான் அவரது தந்தையை துஷ்பிரயோகம் செய்தேன் என்று அவர் கூறுகிறார். நான் ஏன் அப்படி செய்ய வேண்டும்?” என கேள்வி எழுப்பியவர்,  “பாஜக எங்கள் திட்டங்களை நகலெடுக்கிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு செய்தாலும், ராஜஸ்தானில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்” என்று காங்கிரஸ் தலைவர் உறுதியளித்தார்.

மேலும், ராஜஸ்தானில் எந்த நிபந்தனையின் கீழ் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வோம் என்று மல்லிகார்ஜுன் கார்கே மேலும் கூறினார்.