பெங்களூரு: ஜனவரி 12ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான  ஐஎன்டிஐஏ (I.N.D.I.A.) கூட்டணியின்  மாணவர் அமைப்பு அறிவித்து உள்ளது.

2024ம் ஆண்டு  வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு,  பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின்  ஆலோசனை கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெங்களூரு, மும்பையில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கூட்டங்களில் காங்கிரஸ், திமுக உள்பட,   28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்து உள்ளனர்.

2024ம் ஆண்டு  வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க இருப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி செயல்பட்டு வருகின்றனர்.  மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதற்கான குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. அதனால், தேர்தலுக்கு பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கூட்டணியின் மாணவர்கள் அமைப்பு  சார்பில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,  2024 ஜன.12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.