தேராடூன்: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில், சிக்கிய தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.  கடந்த தீபாவளி அன்று இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் கதி என்ன என கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், அவர்கள் நலமுடன் உள்ளனர் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை தோண்டும்  பணியின்போது,  சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, அதாவது சுமார்  200 மீட்டர் அளவுள்ள பகுதி இடிந்து விழுந்துள்ளது.    கடந்த தீபாவளி அன்று (12ந்தேதி)  இந்த விபத்து எற்பட்டது. இதனால், சுரங்கத்திற்குள் சிக்கிய  41 தொழிலாளர்கள்  கதி என்ன என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின.

ஆனால், சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.  தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத்துறை ஈடுபட்டு  தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அமெரிக்காவில் இருந்து சிறப்பு படையினரும் வரவழைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்றுஅm 9  நாட்கள் ஆகிவிட்ட நிலையில்,  ஊழியர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சகிள்,  கட்டுமான தளத்தில் சுரங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், மீட்பு பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான  உணவு, குடிநீர் வழங்குவதற்காக 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை போடப்பட்டு, அதில் 6 அங்குல குழாய் ஒன்றுபொருத்தப்பட்டு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் இந்த குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருவதாகவும், அத்துடன் இந்த குழாய் வழியாக கேமரா ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சிக்கிய தொழிலாளர்களை எண்டோஸ்கோபிக் ஃப்ளெக்ஸி கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு உள்ளது.

அந்த வீடியோவில், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.  மேலும், அவர்கள் குழாய் மூலம் அனுப்பப்பட்ட உணவை  பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோவை பார்த்து தொழிலாளர்களின் குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி இன்று 10வது நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும் மலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து துளை போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும்  உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை சென்றடைய 900 மிமீ குழாய்கள் சில்க்யாரா சுரங்கப்பாதை அருகே கொண்டு வரப்பட்டடுள்ளன. இந்த குழாய் மூலம் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளிக்கொண்ர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Photo and Video: Thanks ANI