அகமதாபாத்

குஜராத் மாநிலத்தில் உள்ள தஹோத் மாவட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகப் பதியப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.  கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்வோரின் குடும்பத்தில் உள்ளோர் யாராவது ஒருவர் தொலைபேசி எண்ணை அளித்தால் போதும் என அறிவிக்கப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் விவரங்கள் அந்த எண்ணுக்கு அரசு அனுப்பி வைக்கிறது.

அவ்வகையில் தாஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த நட்வர்லால் தேசாய் என்பவருக்கு திங்கட்கிழமை அன்று தடுப்பூசி போடப்பட்டதாக அவர் மகன் நரேஷ் தேசாய் என்பவருக்கு ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே வந்துள்ளது.  நட்வர்லால் தேசாய் கடந்த 2011 ஆம் வருடம் தனது 93 ஆம் வயதில் மரணம் அடைந்தவர் ஆவார்.

அத்துடன் திங்கள் அன்று ஊசி போட்டுக் கொண்டவர் பட்டியலில் நட்வர்லால் தேசாய் பெயர் இடம் பெறவில்லை என தெரிய வந்துள்ளது.  இது குறித்து புகார் எழுப்பப்பட்டு விசாரணை செய்ததில் நட்வர்லால் தேசாய் பெயரில் இருந்த பான் நம்பர் அவருடைய பேத்தியின் பான் நம்பர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.  இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  இதுவரை இறந்தவரின் பெயரில் யாருக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்பதும் பதிவுகளில் பெயரே இல்லாதவருக்கு எவ்வாறு தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகளால் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.

இதைப்போல் இதே மாவட்டத்தில் நிபுல் சர்மா என்பவருக்கு அவருடைய தாயார் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக குறும் தகவல் வந்தது.  ஆனால் அவருடைய தாய் கடந்த ஏப்ரல் 15 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.   அந்த பெண்மணி ஏற்கனவே மார்ச் 2 அன்று முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் ஆவார்.

இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்வதற்கு முன்பு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.   ஆயினும் அவர் சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று முதல் டோஸ் தடுப்பூசி போடுக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.   இது குறித்து நிபுல் சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.  இதுவரை எந்த விவரமும் வெளிவரவில்லை.