சென்னை; நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது; வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் என சசிகலா கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அதிமுகவின் சட்டதிட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதை நீக்கிவிட்டு, புதிய பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ்-ன் கட்சி பதவி பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுக வரலாற்றில் ஆண்டுக்கு ஒரு முறை சட்டத்திட்டங்களை யாரும் மாற்றியதில்லை; இது மிகப்பெரிய கேலி கூத்தாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது நடந்த பொதுகுழுதான் உண்மையான பொதுக்குழு. இப்போது  இவர்கள் செய்வது சட்டப்படி செல்லாது. இதையெல்லாம் இப்படியே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்தால் அதிமுக நூறாண்டுகள் கடந்து இருக்கும். அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுகவை  வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்லும் வரை ஓயமாட்டேன் என கூறினார்.

மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது; திமுக எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது  எனவும்   கூறியுள்ளார்.