சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பிடுங்கவும் எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற சபாநாயகருக்கு  ஓ பன்னீர்செல்வம்  கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் பைலாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஓபிஎஸ் கட்சி மற்றும் பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இதையடுத்து, அதிமுகவின் பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைதொடர்ந்து, ஈபிஎஸ் நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுக சட்டமன்ற கட்சியின் நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்றும், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் இருப்பதால் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.