டெல்லி: விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது. அதுவரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என அமலாக்கத்துறை  உறுதியளித்தது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில், சீன  தொழிலாளர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்து ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னை, டெல்லி, மும்பை, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா உட்பட 9 இடங்களில்  வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் மாதம்  17ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் சார்பில், முன்ஜாமின் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது’ என இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் வாதாடும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு  ஆஜராக முடியவில்லை என்று அமலாக்க இயக்குனரகத்தின் (ED) வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து, நீதிபதி பூனம் ஏ பம்பா மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 18ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை  கார்த்திக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற அதன் முந்தைய உத்தரவாதம் அடுத்த தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும் விசாரணை நிறுவனமான அமலாக்கத்துறை உயர் நீதி மன்றத்தில் வாய்மொழியாக உறுதியளித்தது.