ராஜமுந்திரி

ராஜமுந்திரி சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் திறன் மேம்பாட்டுத் திட்ட ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார்.  ஆந்திர அரசுக்கு இந்த ஊழலால் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் காவலை விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம் நவம்பர் 1-ந்தேதி(நாளை) வரை நீட்டித்து உத்தரவிட்டு இருந்தது. கடந்த 50 நாட்களுக்கு மேல் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு, தனக்குப் பார்வைக் கோளாறு மற்றும் உடல்நிலை சரியில்லாததால், மருத்துவச் சிகிச்சை பெற ஜாமீன் வழங்கக் கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவிற்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  அதன் அடிப்படையில் ஆந்திர முன்னாள் முதல் -மந்திரி சந்திரபாபு நாயுடு 53 நாட்களுக்குப் பின்னர் ராஜமுந்திரி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  சிறைக்கு வெளியே அவருக்குக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.