திருவனந்தபுரம்: கேரளா சர்ச்சில் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டிவிட் பதிவிட்டதாக மத்தியஅமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்தது. இந்த கூட்டத்தில்  சுமார்  2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், மாநாட்டு மைய அரங்கில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் அந்த மையமே  தீப்பிடித்து எரிந்தது. அங்கு பிரார்த்தனையில் இருந்தவர்கள்  அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த குண்டு வெடிப்பில் 2பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில்,   50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்நதுள்ளது. இதற்கிடையில், இந்த குண்டு வெடிப்பை நடத்திய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பு நடைபெறுவதற்கு முந்தைய நாள் இஸ்லாமிய அமைப்பினரின் இஸ்ரேல் பாலஸ்தீன போர் குறித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, இஸ்ரேலும், இந்தியாவும்தான் முஸ்லிம்களுக்கு எதிரி என பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்த நாள் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், இந்த குண்டு வெடிப்பை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் நடத்தியிருக்கலாம் என கருத்துக்கள் பரவின.

இதுதொடர்பாக, மத்தியஅமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர்  தனது டிவிட்டர் பக்கத்தில்,  காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளின் திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக அதற்கான விலையை அனைத்து அப்பாவிகளும் சுமக்கும் நிலை உள்ளது. இதை நமக்கு பலமுறை வரலாறு கற்றுக்கொடுத்துள்ளது. இத்தகைய அரசியல் என்பது வெட்கக்கேடானது. காங்கிரஸ், சிபிஎம், யுபிஏ, இந்தியா கூட்டணி வெறுப்பை பரப்பும் தீவிரவாதியான ஹமாசுக்கு ஆதரவு அளிக்கவும், கேரளாவில் ‛ஜிகாத்’ பரப்பவும் அழைப்பு விடுக்கிறது. இத்தகைய செயல் என்பது பைத்தியக்காரத்தனமான அரசியலின் உச்சக்கட்டமாகும். உங்கள் வீட்டுக்கு பின்புறத்தில் பாம்புகளை வைத்து கொண்டால் அது உங்களின் பக்கத்து வீட்டுக்காரர்களை மட்டும் கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த பாம்பு ஒருநாள் உங்களை கூட தாக்கும் என ஹிலாரி ரோதம் கிளிண்டன் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக அமைச்சர்  சந்திரசேகர் மீது, கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.