சென்னை:
அத்துமீறி தலைமை செயலகத்திற்குள் புகுந்து, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, டிடிவி ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனையின் பேரில் முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2ந்தேதி பிற்பகல் தலைமை செயலகம் வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வனை, போலீசார் தலைமை செயலகத்துக்குள் உள்ளே விட மறுத்த நிலையில், அவர்களை மீறி உள்ளே சென்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, இ.பி.எஸ்.சின் உறவினர்களுக்கு மட்டுமே, நெடுஞ்சாலைத்துறைக்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ள தாகவும், இதன் மூலம் சுமார் 1500 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, போலீசார் அனுமதியை மீறி தலைமைச் செயலகத்திற்குள் சென்றதாகவும், ஊழியர்களை தாக்க முயன்றதாகவும் , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில், வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது.
அதன்படி மதுரை தல்லாக்குளம் காவல் நிலையத்தில், இருவரும் 2 வாரங்கள் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சென்னை கோட்டை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது