சென்னையில் இருந்து விலங்குகள் நல வாரிய அலுவலகத்தை டில்லிக்கு மாற்ற திட்டம்

Must read

சென்னை:

சென்னையில் செயல்படும் விலங்குகள் நல வாரியத்தை டில்லிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

1962ம் ஆண்டு முதல் விலங்குகள் நல வாரிய அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. 1991ம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 1,400 சதுர அடி நிலத்தை அப்போதைய திமுக அரசு இந்த வாரியத்து க்கு ஓதுக்கீடு செய்தது. இந்த நிலம் வாரிய பயன்பாட்டிற்கு தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில் அலுவலகம் கட்ட வழங்கப்பட்டது.

2000ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டது. இந்நிலையில் இந்த அலுவலகத்தை டில்லிக்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் தான் எஸ்.பி.குப்தா என்பவர் வாரிய தலைவராக பொறுப்பேற்றார்.

இந்த வாரிய அலுவலகத்தை டில்லிக்கு மாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதை அவர் ஒப்புக் கொண்டார். இது குறித்து குப்தா மேலும் கூறுகையில், ‘‘ இந்த திட்டம் கடந்த 6 மாத காலமாக பரிசீலனையில் இருந்து வருகிறது. டில்லியில் இந்த வாரிய அலுவலகம் செயல்பட எவ்வளவு நிலம் தேவைப்படும் என்று கேட்டு வாரிய செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி இந்த வாரிய நிர்வாக அலுவலகம் டில்லியில் தான் செயல்பட வேண்டும் விதிமுறை உள்ளது’’ என்றார்.

 

ஆனால், அப்படி ஒரு விதிமுறை இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமை அலுவலகம் டில்லியில் இருக்க வேண்டும். ஆனால், இது கட்டாயமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கேட்டுக் கொண்டால் வேறு எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.

இந்த வகையில் விலங்குகள் நல வாரிய அலுவலகத்தை ஹரியானாவுக்கு மாற்றும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. முதல் விருப்பம் டில்லி தான். அடுத்து பகுதியை ஹரியானா பரிதாபாத்துக்கு மாற்றப்படலாம். எனினும் டில்லிக்கு மாற்ற வேண்டும் என்பது தான் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘‘சென்னை அலுவலகம் மண்டல அலுவலகமாக தொடர்ந்து செயல்படவும் வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய மாநில விலங்குகளின் மீது கவனத்தை செலுத்தும் வகையில் இந்த திட்டமும் செயல்படுத்தப்படலாம். இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அனைத்தும் பரிசீலனையில் தான் உள்ளது’’ என்று குப்தா தெரிவித்தார்.

இந்த முடிவு குறித்து திமுக ராஜ்யசபா எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ‘‘ இந்த திட்டம் குறித்து எங்களது கட்சியினருக்கு எதுவும் தெரியவில்லை. இது உண்மை என்றால் இதை எதிர்ப்போம். ஏன் அனைத்து தலைமை அலுவலகமும் டில்லியில் தான் இருக்க வேண்டுமா?.

விலங்குகள் நல வாரியம் சென்னையில் செயல்படக் கூடாதா?. இதை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். சுற்றுசூழல் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். இதை எதிர்த்து போராடுவோம்’’ என்றார்.

More articles

Latest article