கொரோனா பாதிப்புகளை பக்கம் பக்கமாக எழுதலாம் என்ற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.
உண்மையிலேயே லாக் டவுன் காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு பெரிய அளவில் உதவியது தொலைக்காட்சிகளை தாண்டி செல்போன்கள்தான்..

சமூக வலைத்தளங்கள் மூலம் பலவிதமான தொடர்புகள் மற்றும் செய்திகள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்திருந்தால் பொதுமக்கள் பலருக்கும் பைத்தியமே பிடித்து போய் இருக்கும். அந்த அளவுக்கு வீட்டில் செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தின, இன்றும் செலுத்துகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் செல்போன்களுக்கு வேறு ரூபத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது..
பொதுவாக ஒவ்வொருவர் வீட்டிலும் பெரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள ஒன்றிரண்டுதான் ஆண்ட்ராய்ட் போன்கள் இருக்கும்.
இப்போது அந்த ஆண்ட்ராய்டு போன்களைப் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் பறிகொடுக்கும் ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது காரணம் ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் மாணவ மாணவியருக்கு வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருப்பது தான்.
இதனால் பிள்ளைகளுக்காக தனியாக பல ஆயிரம் ரூபாய் செலவில் ஆண்ட்ராய்டு போன் வாங்கும் நிலைமைக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பொது முடக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களில் பலர் ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் செய்த முதல் காரியம், செல்போன் விற்பனை மற்றும் ரிப்பேர் கடைகளை நோக்கி படையெடுத்தது தான்.
அதிலும் பழைய செல்போன்களை மாற்ற முடியாமல் தவித்தவர்கள் வேகவேகமாக புது செல்போன்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்கள்.
ஆன் லைன் மூலம் செல்போன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் செல்போன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட செல்போன் கடைகளில் ஓரிரு நாட்களிலேயே அனைத்து செல்போன்களும் விற்றுத் தீர்ந்து விட்டன.
உதாரணத்திற்கு, மதுரை மாநகரில் இப்போது எங்குமே புதிய செல்போன்கள் கிடைப்பதில்லை என்று புலம்புகின்றனர் பொதுமக்கள். ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை உள்ளதால் கடைகளில் செல்போன்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன என்கிறார் மதுரை மாவட்ட செல்போன் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ் ஜோதிபாசு.
மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் சொல்வதை கேட்டால் தலையே சுற்றுகிறது. “என் மகள் பக்கத்து வீட்டுக்காரரின் செல்போனை கைதவறி உடைத்து விட்டார். ஆறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த செல்போனை ரிப்பேர் செய்ய வழி இல்லாததால் அதற்கு நிவர்த்தி செய்வதற்காக புதிய செல் போன் வாங்குவதற்கு வீதிவீதியாக அலைகிறேன் எங்குமே கிடைத்தபாடில்லை”
கொரோனா லாக் டவுன் ஐந்தாவது பார்ட் இன்னும் என்னென்ன அவதிகளை பொதுமக்களுக்காக கைவசம் வைத்துக்கொண்டு காத்திருக்கிறதோ தெரியவில்லை..
– வி.பி.லதா